4326. | 'செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த பேர் உதவி தீரா; வெம்மை சேர் பகையும் மாற்றி, அரசு வீற்றிருக்கவீட்டீர்; உம்மையே இகழ்வர் என்னின், எளிமையாய் ஒழிவது ஒன்றோ? இம்மையே வறுமை எய்தி, இருமையும் இழப்பர் அன்றே?' |
செம்மை சேர் உள்ளத்தீர்கள் - நேர்மையான சிறந்த மனத்தை யுடையவர்களான நீங்கள்; செய்த பேருதவி - (சுக்கிரீவனுக்குச்) செய்த பெரிய உதவி; தீரா - (என்றென்றும்) அழியாமல் இருக்கும்படி; வெம்மைசேர் பகையும் மாற்றி - மிகக் கடுமையான பகைவனையும் அழித்து; அரசு வீற்றிருக்கவிட்டீர் - அரசாட்சியைப் பெற்றுச் சிறப்பாக அமரும்படி செய்துவிட்டீர்கள்; உம்மையே - (உங்களால் உதவி பெற்றவர்) உங்களையே; இகழ்வர் என்னின் - புறக்கணிப்பார்களானால்; எளிமையாய் - இழிந்த குணத்தோடு பொருந்தி; ஒழிவது ஒன்றோ - பெருமை குலைவது மாத்திரமோ; இம்மையே வறுமை எய்தி - இப்பிறப்பிலேயே வறுமையடைந்து; இருமையும்- இம்மை மறுமைப் பயன்களாகிய இரண்டையும்; இழப்பர் அன்றே - இழந்துவிடு வார்களன்றோ? செய்த நன்றியை மறந்தவர் இம்மையில் செல்வமும் புகழும் அழிந்து, மறுமையில் நற்கதி பெறாது நரகத்தையும் அடைவர் என்பது. பகை - பண்பாகுபெயர். (இம்மையே - தேற்றேகாரம். வீறு - வேறொருவர்க்கு இல்லாத தனிச் சிறப்பு. 58 |