இலக்குவன்பால் அனுமன் வருதல் 4328. | என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு, நன்று உணர் கேள்வியாளன், அருள்வர, நாண் உட்கொண்டான், நின்றனன்; நிற்றலொடும், 'நீத்தனன் முனிவு' என்று உன்னி, வன் துணை வயிரத் திண் தோள் மாருதி மருங்கின் வந்தான். |
என்று அவள் உரைத்த - இவ்வாறு அத்தாரை சொன்ன; மாற்றம் யாவையும் - வார்த்தைகளையெல்லாம்; இனிது கேட்டு - கவனமாகக் கேட்டு; நன்று உணர் - தெளிவாக உணர்ந்த; கேள்வியாளன் - (வேதக்) கேள்வியறிவுடைய இலக்குவன்; அருள்வர - கருணை மேலிட; நாண் உள்கொண்டான் நின்றனன் - வெட்கத்தை மனத்தில் கொண்டவனாய் நின்றான்; நிற்றலோடும் 'முனிவு நீத்தனன்' - (அவ்வாறு) நின்ற அளவில் 'இவன் கோபத்தை நீக்கிவிட்டான்'; என்று உன்னா - என்று கருதி; வன்துணை - வலிய போர்த்துணையாகவுள்ள; வயிரத் திண் தோள் மாருதி - உறுதியும் பலமும் கொண்ட தோள்களையுடைய அனுமன்; மருங்கின் - (இலக்குவன்) அருகிலே; வந்தான் - வந்து சேர்ந்தான். மாற்றம் -சொல் 60 |