இலக்குவன் வினாவும் அனுமன் விடையும் 4329. | வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி, 'அந்தம் இல் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே, முந்திய செய்கை?' என்றான். முனிவினும் முளைக்கும் அன்பான்; 'எந்தை கேட்டு அருளுக!' என்ன இயம்பினன், இயம்ப வல்லான்: |
முனிவினும் முளைக்கும் அன்பான் - கோபப்பட்ட நிலையிலும் அன்பு தோன்றும் இயல்பு கொண்ட இலக்குவன்; வந்து அடிவணங்கி நின்ற - அருகிலே வந்து தன் திருவடிகளை வணங்கி நின்ற; மாருதி வதனம் - அனுமனின் முகத்தை; நோக்கி - பார்த்து; அந்தம் இல் கேள்வி - அளவில்லாத கேள்வி ஞானமுடைய; நீயும் - நீயும்; முந்தின செய்கை - முன்பு நடந்தவற்றை; அயர்த்தனை அன்றோ - மறந்துவிட்டாயல்லவா; என்றான் - என்று கேட்டான்; இயம்ப வல்லான் - (அது கேட்டு) சொல்லின் செல்வனான அனுமன்; எந்தை - எம் தலைவனே; கேட்டு அருளுக என்னா- (நான் சொல்வதைக்) கேட்டருளுக என்று சொல்லி; இயம்பினன் - (மேலும்)கூறலானான். முந்தின செய்கை - மழைக் காலம் கழிந்தவுடன் சுக்கிரீவன் சேனையோடு இராமனுக்கு உதவ வரவேண்டும் என்பது. 61 |