4330.'சிதைவு அகல் காதல் தாயை,
      தந்தையை, குருவை, தெய்வப்
பதவி அந்தணரை, ஆவை,
      பாலரை, பாவைமாரை,
வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல்
      ஆம் ஆற்றல்; மாயா
உதவி கொன்றார்க்கு ஒன்றானும்
      ஒழிக்கலாம் உபாயம் உண்டோ?'

     சிதைவு அகல் - கேடு நீங்கிய; காதல் தாயை - அன்புடைய
தாயையும்; தந்தையை, குருவை - தந்தையையும் குருவையும்; தெய்வப்
பதவி அந்தணரை -
தெய்வத்தின் இடத்திலுள்ள அந்தணர்களையும்; ஆவை,
பாலரை -
பசுக்களையும் குழந்தைகளையும்; பாவைமாரை - மகளிரையும்;
வதை புரிகுநர்க்கும் -
கொலை செய்தவர்களுக்கும்; மாற்றலாம் ஆற்றல் -
(அந்தப் பாவங்களை) நீக்குவதற்குரிய வழிகள்; உண்டாம் - உள்ளதாம்;
மாயா உதவி -
(ஆனால்) அழியாத பேருதவியை; கொன்றார்க்கு -
மறந்தவர்களுக்கோ; ஒழிக்கலாம் உபாயம் - (அப் பாவத்தைப்)
போக்குவதற்குரிய வழி; ஒன்றானும்  உண்டோ - ஒன்றாவது உண்டோ?
(இல்லை).

     தாய், தந்தை, குரு, அந்தணர், பசு, குழந்தை, பெண் ஆகியவர்களைக்
கொல்லுதல் கொடும் பாதகச் செயலாகும்.  இருப்பினும் அப்பாவங்களைப்
போக்குவதற்குரிய கழுவாய் உண்டு.  ஆனால், செந்நன்றி மறத்தலுக்கோ
அத்தகைய கழுவாய் இல்லை என்பதாம்.  'எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் உய்வில்லை, செய்ந்நன்றி கொன்றை மகற்கு' (குறள் 110).
'ஒருவன், செய்தி கொன்றோர்க்கு உய்தியில்லென அறம் பாடிற்றே' (புறம் 34)
என்ற வாக்குகளை ஒப்பிடுக.  மாயா உதவி - பயனழியாத உபகாரம், மறக்கத்
தகாத நன்றி.                                                  62