4331.'ஐய! நும்மோடும், எங்கள்அரிக்
      குலத்து அரசனோடும்,
மெய் உறு கேண்மை ஆகி,
      மேலை நாள் விளைவது ஆன
செய்கை, என் செய்கை அன்றோ?
     அன்னது சிதையும் ஆயின்,
உய் வகை எவர்க்கும் உண்டோ?
      உணர்வு மாசுண்டது அன்றோ?'

     ஐய - ஐயாவே; நும்மோடும் - உங்களுக்கும்; எங்கள் அரிக் குலத்து
அரசனோடும் -
வானரக் கூட்டமாகிய எங்கள் அரசனாகிய சுக்கிரீவனுக்கும்;
மெய் உறு கேண்மை -
(ஒருவரோடு ஒருவர்க்கு) உண்மையான நட்பு;
ஆக- உண்டாகும்படி; மேலைநாள் விளைவதாய - முன்னாளில் உண்டான;
செய்கை என் செய்கை அன்றோ -
செயல் எனது செயல் அல்லவா?
அன்னது -
அந்த நட்புத் தருமம்; சிதையுமா யின் - அழியுமானால்;
உய்வகை எவர்க்கும் உண்டோ? -
(அத் தீவினை யிலிருந்து) தப்பும் வழி
இந்த உலகில் யாருக்குத்தான் உண்டு (இல்லை); உணர்வு - (அதுவல்லாமல்)
எங்கள் அறிவு யாவும்; மாசுண்டது அன்றோ - குற்றம் உடையதாகும்
அல்லவா?

     உங்கள் உதவியைப் பெற்ற நாங்கள் அறிவு கெட்டு இழிவுடைவதா
என்றான் அனுமன்.  மேலைநாள்: முன்னாள்.                         63