4333.'மறந்திலன், கவியின் வேந்தன்;
      வயப் படை வருவிப்பாரைத்
திறம் திறம் ஏவி, அன்னார்
      சேர்வது பார்த்துத்  தாழ்த்தான்;
அறம் துணை நுமக்கு உற்றான் தன்
      வாய்மையை அழிக்கும் ஆயின்,
பிறந்திலன் அன்றோ? ஒன்றோ?
      நரகமும் பிழைப்பது அன்றால்.

     கவியின் வேந்தன் - வானரங்களுக்கு அரசனான சுக்கிரீவன்;
மறந்திலன் -
(உங்களது ஆணையை) மறக்கவில்லை; வயப் படை வரு
விப்பாரை -
வலிமையுள்ள வானரப் படைகளை அழைத்து வரும் தூது
வர்களை; திறம் திறம் ஏவி - தொகுதி தொகுதியாக இடமெங்கும் அனுப்பி;
அன்னார் சேர்வது -
அவ் வானர வீரர்கள் வந்து சேர்வதை; பார்த்துத்
தாழ்ந்தான் -
எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் சிறிது தாமதித்தாள்; அறம்
துணை நுமக்கு உற்றான் -
(அதுவல்லாமல்) தருமத்திற்குத் துணையாகவுள்ள
உங்களை அடைந்த சுக்கிரீவன்; தன் வாய்மையை அழிக்கும் ஆயின் -
தன் சத்தியநெறியை அழிப்பானாயின்; பிறந்திலன் அன்றே - (சுக்கிரீவன்
இவ் வுலகில் பிறந்தும்) பிறவாதவனே ஆவான்; ஒன்றோ - இது மாத்திரமோ?
நரகமும் - (அவனுக்கு மறுமையில்) நரகமும்; பிழைப்பது அன்று - தவறாது.

     ஆல்: அசை. 'நீங்கள் தருமத்தைக் காப்பவர்கள். அத்தகைய உங்களிடம்
சுக்கிரீவன் உறுதியாகச் சொன்ன சொல் தவறுவானானால் அவனது பிறவி
பயனுள்ளதாகாது.  அது  மட்டுமல்லாமல் அவன் தவறாமல் நரகம்
அடைவான்' என்று அனுமன் கூறினான் என்பது.  பிறப்பின் பயன் சத்தியம்
தவறாமல் ஆன்றோர்க்குத் துணை செய்வதான அறம் புரிவதே என்பது இங்கு
வற்புறுத்தப்படுகிறது.                                            65