4334.'உதவாமல் ஒருவன் செய்த
      உதவிக்குக் கைம்மாறாக,
மத யானை அனைய மைந்த!
      மற்றும் உண்டாக வற்றோ -
சிதையாத செருவில் அன்னான் முன்
      சென்று, செறுநர் மார்பில்
உதையானேல், உதையுண்டு ஆவி
      உலவானேல், உலகில் மன்னோ?'

     மதயானை அனைய மைந்த - மதங்கொண்ட யானையைப் போன்ற
வீரனே! உதவாமல் ஒருவன் செய்த - (தான் ஒருவனுக்கு) முன்பு எந்த
உதவியும் செய்யாமலிருக்க(த் தனக்கு) அவன் செய்த;  உதவிக்குக் கைம்மாறு
ஆக -
உதவிக்கு உதவியாக; சிதையாத செருவில் - கெடுதல் இல்லாத
போரில்; அன்னான்முன் சென்று - (அவனுக்குத் துணையாக) முன்னே
சென்று; செறுநர் மார்பில் - (அவனுடைய) பகைவர்களின் மார்பில்;
உதையானேல் -
படைக்கலங்களைச் செலுத் தவில்லையென்றால்;
உதையுண்டு -
(அப் பகைவரின் படைக்கருவி களால் தான்) அடிபட்டு; ஆவி
உலவானேல் -
உயிரைப் போர்க்கவில் லையென்றால்; உலகில் மற்றும் -
உலகத்தில் வேறு கைம்மாறு; உண் டாகவற்றோ - என்ன உள்ளது? (இல்லை).

     உதவி செய்தவனுக்காக ஒருவன் போர்க்களம் சென்று அவன் பகைவரை
அழிக்கவேண்டும்.  அவ்வாறு பொருது அழிக்க முடியாவிட்டால் அப்
பகைவரின் கையால் தன் உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டும்; இவை
ஒருவாறு ஈடாகலாம்.  இவையல்லாமல் உலகில் வேறு கைம்மாறு என்பது
வேறு என்ன உள்ளது? ஒப்புமை: 'செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது' (குறள்:101) உதைத்தல்: அம்பைச் செலுத்துதல்.  66