4335.'ஈண்டு, இனி, நிற்றல் என்பது
      இனியது ஓர் இயல்பிற்று அன்றால்;
வேண்டலர் அறிவரேனும், கேண்மை
      தீர் வினையிற்ற ஆமால்:
ஆண் தகை ஆளி மொய்ம்பின்
     ஐய! நீர் அளித்த செல்வம்
காண்டியால், உன்முன் வந்த
      கவிக்குலக் கோனொடு' என்றான்.

     ஆண்தகை - ஆடவருள் சிறந்த; ஆளி மொய்ம்பின் ஐய - சிங்கம்
போன்ற வலிமையோடு கூடிய தலைவனே!ஈண்டு இனி - இந்த இடத்தில்
இப்போது; நிற்றல் என்பது - (மாறுபாடு கொண்டவன் போல) நிற்பது;
இனியது ஓர் இயல்பிற்று அன்று - நன்மை தரும் ஒரு தன்மையுடையதாக
ஆகாது; வேண்டலர் அறிவரேல்- பகைவர் அறிவாரானால்; நும் கேண்மை-
உமது நட்பு; தீர் வினையிற்ற ஆம் - கெடுவதற்கான செயலாய் முடியும்;
நீர் அளித்த செல்வம் -
(வாலியைக் கொன்று) நீங்கள் தந்த செல்வத்தையும்;
உன்முன் வந்த -
உனக்கு முன்பு பிறந்தவனான; கவிக் குலக் கோனொடு -
வானர குல மன்னவனாகிய சுக்கிரீவனையும்; காண்டி - (நீ) உள்ளே வந்து
காண்பாயாகா; என்றான் - என்று அனுமன் கூறினான்.

     ஓர்: அசை. 'வானரங்கள் வாயிலையடைத்துக் குன்றுகளை அடுக்கின.
ஏனெனில், உனது சீற்றத்தைக் கண்டு அஞ்சியதேயாகும்.  ஆனால் நீ
அவ்வாறு கருதாமல் உன்னோடு மாறுபாடு கொண்டு செய்ததாகக் கருதி ஓர்
அன்னியன் போல இங்கே நிற்கிறாய்! இப்படி நிற்பதைப் பகைவர் பார்த்தால்
உனது சீற்றத்தை மேலும் வளரச் செய்து நம் இரு திறத்தார்க்குமுள்ள நட்பைக்
கெடுப்பதற்கு முயல்வார்கள்.  ஆதலால், நீ உள்ளே வந்து நீங்கள் உதவிய
செல்வத்தால் சிறப்பும் பெருமையும் பெற்றுள்ள சுக்கிரீவனைப் பார்த்து உன்
கோபத்தைத் தணிவிப்பாய்' என்றான் அனுமன். 'உன் தம்முனைச் சார்தி':
தம்முன் - தமையன்; சுக்கிரீவன் இலக்குவனால் தமையன் முறையாகக்
கருதப்படுபவன்.                                                67