இலக்குவன் சீற்றம் தணிந்து பேசுதல்

4336.மாருதி மாற்றம் கேட்ட, மலை
      புரை வயிரத் தோளான்,
தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான்,
      சிந்தை செய்தான் -
'ஆரியன் அருளின் தீர்ந்தான் அல்லன்;
      வந்து அடுத்த செல்வம்
பேர்வு அரிதாகச் செய்த
      சிறுமையான்' என்னும் பெற்றி.

     மாருதி மாற்றம் கேட்ட - அனுமன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட;
மலை புரை வயிரத் தோளான் -
மலையைப் போன்ற உறுதியான
தோள்களையுடைய இலக்குவன்; தீர்வினை சென்று - தோன்றி மறைகின்ற;
நின்ற சீற்றத்தான் -
சினத்தின் விடுபட்டு; ஆரியன் அருளின் - (இச்
சுக்கிரீவன்) இராமனது அருட் பார்வையிலிருந்து; தீர்ந்தான் அல்லன் -
(உண்மையாக) நீங்கினவனில்லை; பேர்வு அரிது ஆக - தன்னை விட்டு நீங்க
முடியாததும்; வந்து அடுத்த செல்வம் - தன்னை வந்து அடுத்ததும் ஆகிய
செல்வம்; செய்த - தந்த; சிறுமையான் - சிறுமையுடையவன்; என்னும்
பெற்றி -
 என்னும் இயல்பை; சிந்தை செய்தான் - மனத்தில் நினைந்தான்.

     'இச் சுக்கிரீவன் எங்களை அவமதித்தான் என்று சொல்ல இயலாது.
தவிர, தான் செசன்ன தவணைப்படி வராமல் இராமனது ஆணையை
மீறவேண்டுமென்ற எண்ணமும் இவனுக்குச் சிறிதும் இல்லை; புதிதாகக்
கிடைத்த செல்வச் செருக்கால் தான் செய்ய வேண்டிய செயலை மறந்ததனால்
ஏற்பட்டது இது' என்று அனுமன் வார்த்தையால் தெளிவடைந்த இலக்குவனின்
சினம் தணிந்தது.  தாரையும் இதே கருத்தைச் சொன்னாள்.(4325)        68