4339. | 'ஆயினும், என்னை யானே ஆற்றி நின்று, ஆவி உற்று, நாயகன்தனையும் தேற்ற நாள் பல கழிந்த; அன்றேல், தீயும், இவ் உலகம் மூன்றும்; தேவரும் வீவர்; ஒன்றோ? வீயும், நல் அறமும்; போகா விதியை யார் விலக்கற்பாலார்? |
ஆயினும் - இருந்தாலும்; என்னை யானே ஆற்றி நின்று - எனது சீற்றத்தை நானாகவே தணித்துக் கொண்டு; ஆவி உற்று - உயிர் தரித்து; நாயகன்தனையும் - இராமனையும்; தேற்ற - தேற்றுவதற்கு; நாள் பல கழிந்த - பல நாள்கள் கழிந்து விட்டன; அன்றேல் - இல்லாவிட்டால் (இராகவன் சினம் தணியாமல் இருந்திருந்தால்); இவ்வுலகம் மூன்றும் தீயும் - இந்த மூன்று உலகங்களும் தீய்ந்துபோகும்; தேவரும் வீவர் - வானுலகத் தேவர்களும் இறந்தொழிவார்கள்; ஒன்றோ - இது மாத்திரந்ததனா?நல் அறமும் வீயும் - சிறந்த தருமங்களும் அழிந்து விடும்; போகா விதியை - (இவ்வாறெல்லாம் நேரவிடாமல்) நிலைத் திருக்கக் கூடிய விதியை; விலக்கற்பாலார் யார்? - போக்குவதற்கு உரியவர் யாவர்? 'என் உள்ளத்தில் மூண்டெழுந்த சினத்தை நானே தணிவித்து என் உயிரையும் தரித்திருக்கச் செய்தேன். பின்பு என் அண்ணனான இராமனைத் தேற்றுவிக்கப் பல நாள்கள் கழிந்துவிட்டன. இவ்வாறு நாள்கள் பல கழிந்து எங்கள் கோபமும் தணிந்திராவிட்டால் இவ்வுலகம் மூன்றும், தேவரும், நல்லறமும் அழிந்தே போயிருக்கும். அவற்றின் நல்வினையால் எங்கள் சினமும் துயரும் தணிந்தன' என்று இலக்குவன் உரைத்தவாறு. விதியின் வலிமையை உணர்த்தவே 'போகா விதியை யார் விலக்கற்பாலார்' என்றார். 'ஊழிற் பெருவலி யாவுள' என்பது குறள் (380). 'விதிக்கும் விதியாகும் என் விற்றொழில் காண்டி' (1735) என்று முன் கூறியவன் இவ்இலக்குவன். 71 |