4340.'உன்னைக் கண்டு, உம் கோன்தன்னை
      உற்ற இடத்து உதவும் பெற்றி,
என்னைக் கண்டனன்போல் கண்டு, இங்கு
      இத் துணை நெடிது வைகி,
தன்னைக் கொண்டு இருந்தே தாழ்ந்தான்;
      அன்று எனின், தனு ஒன்றாலே
மின்னைக் கண்டனையாள்தன்னை
      நாடுதல் விலக்கற்பாற்றோ?

     உன்னைக் கண்டு - (இராமன் முதலில்) உன்னைச் சந்தித்ததனால்;
உற்ற இடத்து உதவும் பெற்றி -
துன்பம் நேர்ந்த காலத்து உதவி செய்யும்
தன்மைக்கு; உம்கோன்தன்னை - உங்கள் அரசனான சுக்கிரீவனை;
என்னைக் கண்டனன் போல் கண்டு -
என்னைத் தம்பியாகக்
கொண்டிருப்பது போலத் தம்பியாகக் கொண்டு; இங்க இத்துணை - இம்
மலையில் இவ்வளவு (நாள்கள் வரையில்); நெடிது வைகி - நீண்ட காலம்
தங்கி; தன்னைக் கொண்டிருந்தே - தன் உயிரை அரிதாகத் தாங்கி்க்
கொண்டு; தாழ்த்தான் - பொறுத்திருந்தான்; அன்று எனின் -
இல்லாவிட்டால்; தனு ஒன்றாலே - தன் வில்லொன்றால்; மின்னைக்
கண்டனையாள் தன்னை -
மின்னலைப் போன்ற உருவத்தைக்
கொண்டவளான சீதையை; நாடுதல் - தேடுதல்; விலக்கற் பாற்றோ -
(மற்றவரால்) தடுக்கக் கூடிய தன்மையுடையதோ? (யாராலும் தடுக்க முடியாது).

     உன்னைக் கண்டதும் உன்னிடம் அருள் உண்டாக உன்மூலமாக உன்
அரசனாகிய சுக்கிரீவனிடம் நட்புக் கொண்டு, இடருற்றபோது அவன்
உதவுவான் என்று கருதினான்; என்னிடம் மிக்க பாசம்கொண்டு என்னைப்
பாவிப்பது போன்றே அவனையும் உடன் பிறந்தவனாகப் பாவித்து உங்கள்
மூலமாக இச் செயலை எளிதில் முடித்துக் கொள்ளலாம் என்று கருதினான்,
இராமன்.  அதனால் இதுவரை பொறுத்திருந்தான்; அவன் இவ்வாறு
பொறுத்திருந்தது உங்களுக்குப் பெருமையைத் தருவதற்கேயாம்;
வல்லமையில்லாமையாலன்று. அவன் நினைந்திருந்தால் தன் வில்லொன்றால்
பகைவரை வதைத்துச் சீதையை எளிதிலே மீட்டிருக்கமுடியும் என்று
இலக்குவன் அனுமனிடம் கூறினான் என்பது.  ஒளியினாலும் (கொடிபோல்)
ஒல்கிடும் மென்மையாலும் சீதையை 'மின்னைக் கண்டனையாள்'என்றார்.  72