4341.'ஒன்றுமோ, வானம்? அன்றி
      உலகமும் பதினால் உள்ள
வென்றிமா கடலும் ஏழ் ஏழ்
      மலை உள்ள என்னவேயாய்
நின்றது ஓர் அண்டத்துள்ளே எனின்,
      அது நெடியது ஒன்றோ?
அன்று நீர் சொன்ன மாற்றம்
      தாழ்வித்தல் தருமம் அன்றால்.

     வானம் ஒன்றுமோ - ஆகாயம் ஒன்று மட்டுமோ?அன்றி - அது
வல்லாமல்; பதினால் உள்ள உலகமும் - பதினான்காக உள்ளனவாகிய
உலகங்களும்; வென்றி மாக்கடல் ஏழும் - வெற்றி பொருந்திய பெரிய ஏழு
கடல்களும்; மலை ஏழும் - ஏழு மலைகளும்; உள்ள என்னவே ஆய்
நின்றது -
இருக்கின்றன என்று சொல்லுமாறு நிற்பதாகிய; ஓர்அண்டத்
துள்ளே -
ஓர் உலகமாகிய உருண்டைக்குள்ளே (ஏதாவதுஓரிடத்தில்);
எனின் - சீதை இருக்கின்றாள் என்றால்; அது நெடிது ஒன்றோ-
அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து மீட்டு வருவது (இராமனது
வில்லுக்கு) பெரிய செயலாகுமோ?அன்று நீர் சொன்ன - (இருந்தாலும்)
முன்பு நீங்கள் சொன்ன; மாற்றம் தாழ்வித்தல் - சொல்லை நிறைவேற்றாமல்
தாமதம் செய்வது; தருமம் அன்று - (உங்களுக்குத்) தக்க செயல் (தருமம்)
ஆகாது.

     மிகப் பெரிய அண்ட கோளத்திலே எங்கே இருந்தாலும் தன்
வில்லாற்றலால் சீதையை மீட்டுவருவது இராமனுக்கு அரிய செயலாகாது.
ஆனாலும் நான் இங்கே சீற்றத்தோடு வந்தது, நீங்கள் முன்பு சொன்ன
சொற்படி நடவாமல் தருமத்தைச் சிதைத்துத் தாமதம் செய்ததாலேயாகும்
என்றான் இலக்குவன்.

     வென்றி மாக்கடல் - ஊழிக் காலத்தில் பொங்கி எழுந்து உலகை
அழிக்கக்கூடியது.                                           73