இலக்குவன் அனுமனொடு செல்லுதல் 4344. | 'முன்னும், நீ சொல்லிற்று அன்றோ முயன்றது; முயற்றுங்காறும், இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம்' எனக் கூறி, அன்னது ஓர் அமைதியான்தன் அருள் சிறிது அறிவான் நோக்கி, பொன்னின் வார் சிலையினானும், மாருதியோடும் போனான். |
பொன்னின் வார் சிலையினானும் - பொன்னால் செய்யப் பெற்ற வில்லைத் தாங்கிய இலக்குவனும் (அனுமன் நோக்கி); முன்னும் முயன்றது - 'முன்பும் நாங்கள் மேற்கொண்ட முயற்சியும்; நீ சொல்லிற்று அன்றோ - நீ சொல்லியது தானே; இன்னும் - இனிமேலும்; முயற்றுங்காறும் - முயற்சி மேற்கொள்ளுங் காலத்தும்; நீ இசைத்த - நீ சொல்லியதையே; செய்வான் இயைந்தனம் - செய்வதறகு உடன் படுகிறோம்'; என்று கூறி - என்று சொல்லி; அன்னது ஓர் அமைதி யான்தன் - (மேலே கூறப்பட்ட) நிலையையுடையவனான சுக்கிரீவனது; அருள் சிறிது அறிவான் நோக்கி - மனநிலையையும் சிறிது தெரிந்து கொள்ளக் கருதி; மாருதியோடும் போனான் - அனுமனுடன் சென்றான். சுக்கிரீவன் கார்காலம் நீங்கியவுடன் சீதையைத் தேடுவதற்கு முயலாமல் அந்தப்புரத்தில் உறங்கிக்கிடக்கின்றமையால் அவன் 'அன்னது ஓர் அமைதியான்' எனப்பட்டான். அருள் - சுக்கிரீவன் எங்களிடம் அன்பு காட்டும் விதம். பொன்னின் வார்சிலை - அழகானதும் நீண்டதுமான வில் எனினும் அமையும். 76 |