தாரை திரும்பிப் போதல் 4345. | அயில் விழி, குமுதச் செவ் வாய், சிலை நுதல், அன்னப் போக்கின், மயில் இயல், கொடித் தேர் அல்குல், மணி நகை, திணி வேய் மென்தோள் குயில்மொழி, கலசக்கொங்கை, மின்இடை, குமிழ் ஏர் மூக்கின், புயல் இயல் கூந்தல், மாதர் குழாத்தொடும் தாரை போனாள். |
தாரை - தாரையானவள்; அயில்விழி - வேல்போன்ற கண்களையும்; குமுதச் செவ்வாய் - செவ்வாம்பல் மலரையொத்த சிவந்த வாயையும்; சிலை நுதல் - வில்லைப் போன்ற புருவத்தையும்; அன்னப் போக்கின் - அன்ன நடையை ஒத்த நடையையும்; மயில் இயல் - மயிலைப் போன்ற சாயலையும்; கொடித் தேர் அல்குல் - கொடிகளை யுடைய தேர்த்தட்டுப் போன்ற அல்குலையும்; மணிநகை - முத்துப் போன்ற பற்களையும்; திணிவேய் மென்தோள் - வலிய மூங்கில் போன்ற மெல்லி தோள்களையும்; குயில் மொழி- குயிலின் குரலையொத்த சொல்லையும்; கலசக் கொங்கை - பொற்கலசத்தைப் போன்ற முலைகளையும்; மின் இடை - மின்னல் போன்ற இடையையும்; குமிழ் ஏர்மூக்கின் - குமிழ மலர்போன்ற எடுப்பான மூக்கையும்; புயல் இயல் கூந்தல் - கருமேகத்தையொத்த கரிய கூந்தலையும் உடைய; மாதர் குழாத்தோடும் - மகளிர் கூட்டத்துடனே; போனாள் - திரும்பிச் சென்றாள். உவமையணி. தாரையுடன் சென்ற மகளிர்க்கே இவ்வனப்புகள் அனைத்தையும் கூறித் தாரைக்கு ஒன்றும் அடைமொழி கூறாமல் அன்னவளின் கைம்மைக் கோலமும், கற்புநிலையும் உணர்த்தப்படுகின்றன. முத்து, நவமணிகளுள் ஒன்றாதலால் மணி எனப்பட்டது. 77 |