அங்கதன் இலக்குவனை வணங்கிச் சுக்கிரீவனிடம் செல்லுதல்

4346. வல்ல மந்திரியரோடும், வாலி
      காதலனும், மைந்தன்
அல்லி அம் கமலம் அன்ன
      அடி பணிந்து, அச்சம் தீர்ந்தான்;
வில்லியும் அவனை நோக்கி, 'விரைவின்
     என் வரவு, வீர!
சொல்லுதி நுந்தைக்கு' என்றான்;' 'நன்று'
      என, தொழுது போனான்.

     வாலி காதலனும் - வாலியின் மகனான அங்கதனும்; வல்ல மந்
திரியரோடும் -
நீதிமுறைகளிலும் அரசியல் நூல்களிலும் தேர்ச்சி பெற்ற
அமைச்சர்களுடன் (வந்து); மைந்தன் அல்லி அம் கமலம் அன்ன -
வீரனான இலக்குவனுடைய அகவிதழ் கொண்ட அழகிய செந்தாமரை
மலர்போன்ற; அடி பணிந்து - திருவடிகளில் வீழ்ந்து வணங்கி; அச்சம்
தீர்ந்தான் -
(இலக்குவனால் என்ன நேரிடுமோ என்று எண்ணிய) பயம்
நீங்கப் பெற்றான்; வில்லியும் அவனை நோக்கி - வில்வீரனான இலக்குவனும்
அந்த அங்கதனைப் பார்த்து; வீர என் வரவு - 'வீரனே! எனது வருகையை;
நுந்தைக்கு விரைவின் சொல்லுதி -
உன் சிற்றப்பனாகிய சுக்கிரீவனுக்கு
விரைந்து சென்று கூறுவாய்; என்றான் - என்று மொழிந்தான் (அது கேட்டு);
நன்ற என -
நல்லது என்று சொல்லி; தொழுது போனான் -- (அவ்
இலக்குவனை) வணங்கிப் போனான்.                                78