4350. | 'வருகின்ற வேகம் நோக்கி, வானர வீரர், வானைப் பொருகின்ற நகர வாயில் பொற் கதவு அடைத்து, கற் குன்று அருகு ஒன்றும் இல்லா வண்ணம் வாங்கினர் அடுக்கி, மற்றும் தெரிகின்ற சினத்தீப் பொங்க, செருச் செய்வான் செருக்கி நின்றார். |
வானர வீரர் - வானர வீரர்கள்; வருகின்ற வேகம் நோக்கி - இலக்குவன் வரும் வேகத்தைப் பார்த்து; வானைப் பொருகின்ற - வானத்தைச் சென்று தொடுகின்ற; நகர வாயில் - (கிட்கிந்தா) நகரத்தின் வாயிலில் உள்ள; பொன் கதவு அடைத்து - பொன்னாலாகிய கதவுகளைச் சாத்திக் கொண்டு; அருகு ஒன்றும் இல்லா வண்ணம் - பக்கத்தில் ஒரு சிறு குன்றுகூட இல்லாதபடி; கற்குன்று வாங்கினர் அடுக்கி - கல் மலைகளையெல்லாம் எடுத்துவந்து (அவ் வாயிலில்) ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி; மற்றும் - மேலும்; தெரிகின்ற சினத்தீப் பொங்க - வெளிப்படுகின்ற கோபத் தீயானது கொதித்தெழு; செருச் செய்வான் - (இலக்குவனோடு) போர் செய்யும் பொருட்டு; செருக்கி நின்றார் - செருக்குக் கொண்டு நின்றார்கள். வானர வீரர்கள் நகரவாயிலின் பொற் கதவுகளைத் தாளிட்டு அவற்றின் அருகில் பல் சிறு குன்றுகளை அடுக்கிவைத்த செய்தி முன் கூறப்பட்டது. (4301) அதனை அங்கதன் சுக்கிரீவனுக்குத் தெரிவிக்கிறான். வானைப் பொருகின்ற நகர வாயில் - உயர்வுநவிற்சியணி. 82 |