4352. | 'அந்நிலை கண்ட, திண் தோள் அரிக் குலத்து அனிகம் அம்மா! எந்நிலை நின்றது என்கேன்? யாண்டுப் புக்கு ஒளித்தது என்கேன்? இந் நிலை கண்ட அன்னை, ஏந்து இழை ஆயத்தோடு, மின் நிலை வில்லினானை வழி எதிர் விலக்கி நின்றாள். |
அந் நிலை கண்ட - அவ்வாறு (இலக்குவனால் நேர்ந்த) நிலை மையைப் பார்த்த; திண்தோள் அரிக் குலத்து அனிகம் - வலிய தோள் களையுடைய வானர சேனை; எந் நிலை நின்றது என்கேன் - எந்த நிலைமையில் இருந்ததென்று சொல்வேன்? யாண்டுப் புக்கு - எந்த இடத்தில் புகுந்து; ஒளித்தது என்கேன் - பதுங்கியது என்று சொல்வேன்; இந் நிலை கண்ட அன்னை - (குரக்குச் சேனையின்) இத்தகைய நிலைமையை நேரிலே பார்த்த (என்) தாயான தாரை; ஏந்து இழை ஆயத்தோடு - சிறந்த அணிகளை அணிந்த மகளிர் கூட்டத்துடனே; மீன் நிலை வில்லினானை - மின்னல் போன்று ஒளிரும் வில்லைத் தாங்கிய இலக்குவனை; வழி எதிர் விலக்கி நின்றாள் - வழியிலே எதிரே சென்று வழி மறித்து நின்றாள். அம்மா - வியப்பிடைச்சொல். இலக்குவனது திருவடி பட்ட அளவில் வாயிற் கதவு முதலியன பொடியாய்விட்டதைக் கண்ட வானரங்கள் அஞ்சி, உயிர் தப்பிக் கலங்கிப் போனதிசை தெரியாமல் ஓடிப் போயின; அப்போது இலக்குவன் சினத்தோடு வர, அவனை மகளிர் கூட்டத்தோடு தாரை எதிர் கொண்டாள் என்பது. அனிகம் -சேனை; அனீகம் என்ற வடசொல்லின் திரிபு. மின் நிலைவில் - நிலைத்தல் என்றும் இல்லாத மின்னல் வில்லிடம் நிலைத்து நின்றது என்பது நயம். 84 |