அங்கதன் மறுமொழி 4356. | உணர்த்தினேன்முன்னர்; நீ அஃது உணர்ந்திலை; உணர்வின் தீர்ந்தாய்; புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி, மாருதிக்கு உரைக்கப் போனேன்; இணர்த் தொகை ஈன்ற பொன் - தார் எறுழ் வலித் தடந் தோள் எந்தாய்! கணத்திடை, அவனை, நீயும் காணுதல் கருமம்' என்றான். |
இணர்த் தொகை ஈன்ற - பூங்கொத்தின் தொகுதி கொண்டு தொடுக்கப்பட்ட; பொன்தார் - அழகிய மாலையை அணிந்த; எறுழ் வலித் தடந்தோள் எந்தாய் - மிக்க வலிமை பொருந்திய பெரிய தோள் களையுடைய என் தந்தையே!முன்னர் உணர்த்தினேன் - (இலக்குவன் வருகையை உனக்கு) முன்னமே தெரிவித்தேன்; (ஆனால் அப்பொழுது); நீ உணர்வின் தீர்ந்தாய் - நீ உணர்வு மயங்கியிருந்தாய்; அஃது உணர்ந்திலை - (அதனால் நான் சொன்ன) அதனைத் தெரிந்து கொண்டாயில்லை; புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி - (ஆகவே) நான் செய்யக் கூடியது வேறு ஒன்றும் இல்லாததை உணர்ந்து; மாருதிக்கு உரைக்கப் போனேன் - அனுமனுக்குச் சொல்லப் போனேன்; கணத்திடை - ஒரு நெடிப் பொழுதிற்குள்; அவனை - அந்த இலக்குவனை; நீயும் காணுதல் - நீயும் சென்று பார்ப்பது; கருமம் என்றான் - செய்ய வேண்டிய செயலாகும் என்று (சுக்கிரீவனிடம் அங்கதன்)கூறினான். எறுழ்வலி - ஒரு பொருட் பன்மொழி. 88 |