போதையால் மயங்கியதற்குச் சுக்கிரீவன் வருந்துதல் 4357. | உறவுண்ட சிந்தையானும் உரை செய்வான்; 'ஒருவற்கு இன்னம் பெறல் உண்டோ, அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி? உற்றது இறல் உண்டோ? என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம், நறவு உண்டு மறந்தேன்; காண நாணுவல், மைந்த!' என்றான். |
உறவு உண்ட சிந்தையானும் - இராமனிடம் நட்புக் கொண்ட மனத்தையுடையவனாகிய சுக்கிரீவனும்; உரை செய்வான் - (அங்கதனை நோக்கிச்) சொல்வான்; மைந்த - மகனே! அவரால் ஈண்டு - அந்த இராமனால் (இபபோது) இங்கே; யான் பெற்ற - நான் அடைந்துள்ள; பேர் உதவி - பெரிய உதவி; ஒருவற்கு இன்னம் பெறல் உண்டோ - மற்றொருவரால் இனிப் பெற முடியுமோ? (முடியாது); உற்றது இறல் உண்டோ - (நான்) அடைந்த பெருஞ் செல்வத்திற்கு அழிவேனும் உள்ளதோ? (இல்லை); என்னின் தீர்வான் - என்னால நீக்கிக் கொள்ளும்படி; இருந்த பேர் இடரை எல்லாம் - நினைத்திருந்த (இராமனுடைய) பெருந் துன்பங்களையெல்லாம்; நறவு உண்டு மறந்தேன் - மதுவைக் குடித்தால் மறந்து போனேன்; (ஆதலால்) காண - இலக்குவனைப் பார்ப்பதற்கு; நாணுவல் என்றான் - வெட்கப்படுகின்றேன்' என்று சொன்னான். பிறர் எவராலும் பெறுதற்கு அரியதும், அழிவில்லாததுமான பேருதவியை நான் இராமனிடமிருந்து பெற்றிருந்தும், மது மயக்கத்தால் நன்றியை மறந்து அத் தலைவனுக்குச் செய்ய வேண்டிய உதவி எதையும் செய்யாமல் அவனை வருந்துமாறு விட்டு வைத்ததால் இப்போது இலக்குவனைக் கண்ணாற் காணுதற்கும் வெட்கப்படுகிறேன் என்றான் சுக்கிரீவன் என்பது. உறவுண்ட சிந்தையான் - மனமொத்த நண்பன். போரிடர்: சீதையை நாடிப் பெறாமையால் இராமன் மென்மேலும் படுகின்ற துன்பம். 89 |