4363.'வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும்,
      மரபு இல் கொட்பும்,
தஞ்சம் என்றாரை நீக்கும்
      தன்மையும், களிப்பும், தாக்கும்:
கஞ்ச மெல் அணங்கும்
     தீரும், கள்ளினால்; அருந்தினாரை
நஞ்சமும் கொல்வது அல்லால்,
      நரகினை நல்காது அன்றே?

     கள்ளினால் - கள்ளைக் குடிப்பதால்; வஞ்சமும் களவும் - வஞ்
சனையும் திருட்டும்; பொய்யும் மயக்கமும் - பொய் பேசுதலும் அறி
யாமையும்; மரபு இல் கொட்பும் - தொன்றுதொட்டு வந்த முறைக்கு மாறான
கொள்கையும்; தஞ்சம் என்றாரை - அடைக்கலமாக அடைந்தவரை; நீக்கும்
தன்மையும் -
பாதுகாவாது நீக்கும் தீய பண்பும்; களிப்பும் - செருக்கும்;
தாக்கும் -
(சேர்ந்து வந்து) வருத்தும்; கஞ்ச மெல் அணங்கும் -
செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் மென்மை நிரம்பிய திருமகளும்; தீரும் -
நீங்குவாள்; நஞ்சமும் - நஞ்சும்; அருந்தினாரைக் கொல்வது அல்லால் -
உண்பவரைக் கொல்லுமேயல்லாமல்; நரகினை நல்காது - (அவர்களுக்கு)
நரகத்தைக் கொடுக்காது.

     தன்னை உண்டவரது உடம்பை மட்டும் நஞ்சு அழிக்கும்; கள்ளோ
உடம்பையழித்தலோடு உயிரையும் நரகத்தில் சேர்க்கும் என்பது.
உவமானமாகிய நஞ்சைவிட உவமேயமாகிய மதுவுக்கு வேற்றுமை தோன்றக்
கூறியது: வேற்றுமையணி.  கள்ளினால் - வேற்றுமை மயக்கம். 'துஞ்சினார்
செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்' - (குறள்-
926) என்ற குறட் கருத்தை ஒப்பிட்டுணர்க. குடிவெறியால் கைப்பொருள்
அனைத்தும் இழந்து வறியராவர் ஆதலின் கஞ்ச மெல்லணங்கும் தீரும்
என்றார்.  திருக்குறளும் இக்கருத்தினைக் கூறும்: 'இருமனப் பெண்டிரும்
கள்ளுங் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு' (குறள் : 920)           95