4364.'கேட்டெனன்,  ''நறவால் கேடு வரும்''
      என்; கிடைத்த அச்சொல்
காட்டியது; அனுமன் நீதிக்
      கல்வியால் கடந்தது அல்லால்,
மீட்டு இனி உரைப்பது என்னே?
      விரைவின், வந்து அடைந்த வீரன்
மூட்டிய வெகுளியால் யாம்
      முடிவதற்கு ஐயம் உண்டோ?

     நறவால் கேடு வரும் எனக் கேட்டெனன் - கள்ளைக் குடிப்பதால்
தீங்கு விளையும் என்று (பெரியோர்) சொல்லக்கேட்டிருக்கிறேன்; கிடைத்த
அச்சொல் காட்டியது -
(அவ்வாறு) கூறப்படும் அந்தக் கூற்று நேர்முகமாகத்
தன் வலிமையைக் காட்டிவிட்டது; மீட்டு இனி உரைப்பது என்னே -
திரும்பவும் இனிமேல்சொல்ல வேண்டுவது என்ன இருக்கின்றது?அனுமன்
நீதி கல்வியால் கடந்தது -
அனுமனது நீதிநூல் அறிவால் மூளவிருந்த
துன்பத்திலிருந்து நாம் நீங்கியது; அல்லால் - அல்லாமல்; விரைவின்
வந்தடைந்த -
விரைவாக வந்து சேர்ந்த; வீரன் மூட்டிய வெகுளியால் -
வீரனாகிய இலக்குவனது மூட்டப்பட்ட சினத்தால்; நாம் முடிவதற்கு - நாம்
இறந்தொழிவதற்கு; ஐயம் உண்டோ - ஐயம் உளதாகுமோ?

     அனுமன் இடத்திற்கேற்பத் தனது நுட்ப உணர்வினால் இலக்குவனது
சீற்றத்தைத் தணித்திரா விட்டால் நாம் இறுதி எய்திருப்போம் என்பதில்
ஐயமில்லை என்றான் சுக்கிரீவன்.  'காட்டியது': நேர்முகமாக வந்து காட்டியது
அனுமனது கல்வியையும் நீதியையும் புகழ்ந்து அவனால் தான் தப்பியதை
யுணர்ந்து சுக்கிரீவன் கூறியது இது.                                96