4365.'ஐய! நான் அஞ்சினேன், இந்
      நறவினின் அரிய கேடு;
கையினால் அன்றியேயும் கருதுதல்
      கருமம் அன்றால்;
வெய்யது ஆம் மதுவை இன்னம்
      விரும்பினேன் என்னில், வீரன்
செய்ய தாமரைகள் அன்ன
     சேவடி சிதைக்க' என்றான்

     ஐய - ஐயனே (அங்கதனே); இந் நறவினின் அரிய கேடு - இந்த
மதுவால் நேரும்  பெரிய தீங்கிற்கு; நான் அஞ்சினேன் - நான் பயந்தேன்;
கையினால் அன்றியேயும் -
அந்த மதுவைக் கையினால் தீண்டு வதல்லாமல்;
கருதுதலும் கருமம் அன்று -
மனத்தால் நினைத்தலும் செய்யக்கூடிய
செயலாகாது; வெய்யது ஆம் மதுவை - கொடியதான இந்தக் கள்ளை;
இன்னம் விரும்பினேன் என்னின் -
இனியும் நான் விரும்பினேனானால்;
வீரன் செய்ய தாமரைகள் அன்ன சேவடி -
வீரனான
இராமனுடைய செந்தாமரை போன்று அடிகள்; சிதைக்க என்றான் - என்ன
அழிப்பனவாக என்று ஆணையிட்டுக் கூறினான்.

     இராமனின் திருவடியே சான்றாக மதுவை இனி ஒருக்காலும்
விரும்பமாட்டேன் என்று சுக்கிரீவன் சூளுரை செய்தவாறு, மதுவை
இடைவிடாது நினைத்தலும், இடையறாது காண்டலும் பின்னர் அதனைப்
பருகுவதற்குத் தூண்டுகோல் ஆகுமாதலின் 'கருதுதல் கருமம் அன்று'
என்றான்.  வெய்யதாம் மது: கடும் புளிப்பையுடைய மது; மேன்மேலும்
விருப்பத்தை விளைவிக்கும் மது.                                97