இலக்குவனைச் சுக்கிரீவன் எதிர்கொள்ளல் 4366. | என்று கொண்டு இயம்பி, அண்ணற்கு எதிர்கொளற்கு இயைந்த எல்லாம் நன்று கொண்டு, 'இன்னும் நீயே நணுகு!' என, அவனை ஏவி, தன் துணைத் தேவிமாரும், தமரொடும தழுவ, தானும் நின்றனன், நெடிய வாயில் கடைத்தலை, நிறைந்த சீரான். |
நிறைந்த சீரான் - மிகுந்த நற்பண்புகளைக் கொண்ட சுக்கிரீவன்; என்று கொண்டு இயம்பி - மதுவை இனித் தொடேன் என்று சூளுரை செய்து கொண்டு; அண்ணற்கு எதிர்கொளற்கு - இலக்குவனை எதிர் கொள்வதற்கு; இயைந்த எல்லாம் - உரிய எல்லாவற்றையும்; நன்று கொண்டு - சிறப்பாக எடுத்துக் கொண்டு; இன்னும் நீயே நணுகு - இப்போதும் நீயே (அவனிடம்) செல்வாய்; எனஅவனை ஏவி - என்று அங்கதனுக்குக் கட்டளையிட்டு; தன் துணைத் தேவிமாரும் - தன் வாழ்க்கைத் துணைவியரான மனைவியர்; தமரொடும் தழுவ - உறவினருடன் தன்னைச் சூழ்ந்திருக்க; தானும் - தானும்; நெடிய வாயில் கடைத்தலை - உயர்ந்த பெரிய அரண்மனையின் தலைவாயிலில்; நின்றனன் - காத்திருந்தான். அண்ணலை எதிர்கொள்ள இயைந்தவை: கொடி, குடை, சாமரம் முதலியன. அண்ணற்கு வேற்றுமை மயக்கம் அரசனுக்குப் பட்டத்தரசியர் தவிர வேறு மனைவியரும் உண்டாகலின் 'துணைத் தேவிமார்' எனப்பட்டது. 98 |