4367. | உரைத்த செஞ் சாந்தும், பூவும், 'சுண்ணமும், புகையும், ஊழின் நிரைத்த பொற்குடமும், தீப மாலையும், நிகர் இல் முத்தும், குரைத்து எழு விதானத்தோடு தொங்கலும், கொடியும், சங்கும், இரைத்து இமிழ் முரசும், முற்றும் இயங்கின, வீதி எல்லாம். * |
உரைத்த செஞ்சாந்தும் - அரைத்த சிவந்த சந்தனக் குழம்பும்; பூவும் சுண்ணமும் - மலர்களும் நறுமணப் பொடிகளும்; புகையும் - (அகில் முதலிவற்றின்) நறும்புகையும்; ஊழின் நிரைத்த பொன் குடமும் - முறையாக வைக்கப் பெற்ற குடங்களும்; தீப மாலையும் - விளக்குகளின் வரிசையும்; நிகர் இல் முத்தும் - ஒப்புமை இல்லாத நல்ல முத்து மாலைகளும்; குரைத்து எழு விதானத்தோடு - ஒலித்து விளங்குகின்ற விதானங்களோடு; தொங்கலும் - பீலிக் குஞ்சங்களும்; கொடியும் சங்கும் - கொடிகளும் சங்குகளும்; இரைத்து இமிழ் முரசும் - இரைந்து ஒலிக்கின்ற முரசங்களும்; முற்றும் - (ஆகிய) இவை யாவும்; வீதி எல்லாம் - (கிட்கிந்தா நகரத்) தெருக்களில் எல்லாம்; இயங்கின - (சென்று) நிறைந்தன. இலக்குவன் வருகையை யுணர்ந்த கிட்கிந்தா நகர மக்கள் மங்கலப் பொருள்களைக் கொண்டு வரவேற்றனர் என்பது. அட்டமங்கலங்கள்: கண்ணாடி, பூரண கும்பம், இடபம், வெண்கவரி, தோட்டி, திருமகள் உருவம், ஸ்வஸ்திகம், விளக்கு என்பன. 99 |