4369. அங்கதன், பெயர்த்தும் வந்து, ஆண்டு
     அடி இணை தொழுதான், 'ஐய!
எங்கு இருந்தான் நும் கோமான்?'
      என்றலும், 'எதிர்கோள் எண்ணி,
மங்குல் தோய் கோயில் கொற்றக்
      கடைத்தலை மருங்கு நின்றான் -
சிங்க ஏறு அனைய வீர! -
      செய் தவச் செல்வன்' என்றான்.

     அங்கதன் - வாலி மைந்தனான அங்கதன்; பெயர்த்தும் வந்து -
மறுபடியும் (இலக்குவன் உள்ள இடத்திற்கு) வந்து; ஆண்டு இணை அடி
தொழுதான் -
அங்கே இலக்குவனுடைய இணை அடிகளை வணங்கி னான்
(அப்பொழுது இலக்குவன் அவனை நோக்கி); ஐய நும்கோமான் - ஐயனே
உங்கள் தலைவனாகிய சுக்கிரீவன்; எங்கு இருந்தான் - எங்கே இருக்கிறான்;
என்றலும் -
என்று கேட்ட அளவில் (அங்கதன் இலக்குவனை நோக்கி); சிங்க
ஏறு அனைய வீர -
'ஆண் சிங்கத்தை ஒத்த வீரனே!செய் தவச் செல்வன்
-
(முற்பிறப்பில்) செய்த தவமாகிய செல்வத்தையுடைய சுக்கிரீவன்; எதிர்கோள்
எண்ணி -
(உன்னை) எதிர் கொள்ள நினைந்து; மங்குல் தோய் கோயில் -
மேகம் படிகின்ற அரண்மனையினது; கொற்றக் கடைத்தலை மருங்கு -
வெற்றியமைந்த தலைவாயில் புறத்து; நின்றான் என்றான் - நிற்கின்றான்
என்று சொன்னான்.

     முற்பிறவியில் சுக்கிரீவன் செய்த தவப்பயனால்தான் உமது நட்பு
அவனுக்கு வாய்த்தது என்பான் அவனைச் 'செய்தவச் செல்வன்' என்றான்
என்பது.  இப் பிறப்பினும், வரும் பிறப்புகளிலும் தவம் உதவும் என்பதால்
செய்தவம் என வினைத்தொகையால் குறித்தார்.  எதிர்கோள் - முதனிலை
திரிந்த தொழிற்பெயர்.                                         101