4370. கண்ணமும் தூசும் வீசி, சூடகத்
      தொடிக் கைம் மாதர்,
கண் அகன் கவரிக் கற்றைக் கால்
      உற, கலை வெண் திங்கள்
விண் உற வளர்ந்தது என்ன
      வெண் குடை விளங்க, வீர
வண்ண வில் கரத்தான் முன்னர்,
      கவிக் குலத்து அரசன் வந்தான்.

     சூடகத் தொடிக் கை மாதர் - சூடகத்தையும் தொடியையும் அணிந்த
கைகளையுடைய வானரப பெண்கள்; சுண்ணமும் தூசும் வீசி - நறுமணப்
பொடிகளையும் ஆடைகளையும் வீசிக் கொண்டு; கண் அகல் கவரிக்
கற்றை-
விசாலமான வெண்சாமரைத் தொகுதிகளால்; கால் உற -
காற்றையுண்டாக்கவும்; கலைவெண்திங்கள் - பதினாறு கலைகளும்
நிரம்பிய வெண்ணிறமான சந்திரன்; விண் உற வளர்ந்தது என்ன -
வானத்தில் பொருந்தி விளங்குவது போல; வெண்குடை விளங்க -
வெண்கொற்றக் குடை விளங்கவும்; வீர வண்ண வில் கரத்தான் முன்னர் -
வீரம் நிறைந்த அழகிய வில்லைப் பிடித்த கையையுடைய இலக்குவன் எதிரில்;
கவிக் குலத்து அரசன் -
வானரத் தலைவனான சுக்கிரீவன்; வந்தான் -
வந்தான்.

     சுண்ணமும் தூசும் வீசுதல் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் என்பது. சூடகம்,
தொடி - கைவளையின் வகைகள். சூடகம் - முன்கைவளை. தொடி -
தோள்வளை; தோள்வளை இருபாலாரும் அணிவது.  குடையும் சாமரமும்
அரச சின்னங்களாம்.                                           102