4371. | அருக்கியம் முதல ஆன அருச்சனைக்கு அமைந்த யாவும் முருக்கு இதழ் மகளிர் ஏந்த, முரசுஇனம் முகிலின் ஆர்ப்ப, இருக்குஇனம் முனிவர் ஓத, இசை திசை அளப்ப, யாணர்த் திருக் கிளர் செல்வம் நோக்கி, தேவரும் மருளச் சென்றான். |
முருக்கு இதழ் மகளிர் - கல்யாண முருங்கை மலரையொத்த இதழ்களையுடைய பெண்கள்; அருக்கியம் முதல ஆன - அருக்கியம் முதலாகவுள்ள; அருச்சனைக்கு அமைந்தயாவும் - (இலக்குவனை) வர வேற்று வழிபடுவதற்குரிய பொருள்கள் அனைத்தும்; ஏந்த - கையில் ஏந்தி வரவும்; முரசு இனம் முகிலின் ஆர்ப்ப - பேரிகை முதலிய இசைக் கருவிகளின் தொகுதி மேகம் போன்று ஒலிக்கவும்; முனிவர் இருக்கு இனம் ஓத - முனிவர் இருக்கு முதலியவற்றை ஓதிவரவும்; இசை திசை அளப்ப - இசையொலி எல்லாத் திக்குகளிலும் பரவவும்; யாணர் திருக் கிளர் செல்வம் - புதியதான சிறப்புமிக்க (தனது) செல்வச் சிறப்பை; நோக்கித் தேவரும் மருள - கண்டு தேவர்களும் திகைக்கும்படி; சென்றான் - (சுக்கிரீவன் இலக்குவன் முன்) சென்றான். அரசன் பிற அரச குலத்தவரானவரை வரவேற்கும் முறை இங்குக் கூறப் பெற்றுள்ளது. அருக்கியம் - கைகழுவ நீர்தருதல் - இது பதினாறு வகை உபசாரங்களான சோடச உபசாரங்களில் ஒன்று. மற்றவை: இருக்கையளித்தல், கால் கழுவ நீர் தருதல், முக்குடி நீர்தருதல், நீராட்டல், ஆடை காத்தல், முப்புரிநூல் தருதல், சந்தனக் குழம்பு பூசுதல், மலர் சூட்டுதல், அட்சதை தூவுதல், நறும்புகையூட்டல், விளக்கிடல், கர்ப்பூரம் ஏற்றுதல், அமுதம் ஏந்துதல், அடைக்காய் தருதல், மந்திர மலரால் அருச்சித்தல் என்பன. முருக்கு - மரப்பெயர் மலருக்காதலால் முதலாகு பெயர்; முருக்கிதழ் - கலியாண முருங்கை (முள் முருங்கை எனவுங்கூறுவர்). 103 |