4372. | வெம் முலை மகளிர் வெள்ளம் மீன் என விளங்க, விண்ணில் சும்மை வான் மதியம் குன்றில் தோன்றியது எனவும் தோன்றி, செம்மலை எதிர்கோள் எண்ணி, திருவொடு மலர்ந்த செல்வன், அம்மலை உதயம் செய்த தாதையும் அனையன் ஆனான். |
செம்மலை - தலைமை பொருந்திய இலக்குவனை; எதிர்கோள் எண்ணி- எதிர் கொள்ள நினைந்து; திருவொடு மலர்ந்த செல்வன் - அரசச்செல்வத்துடன் விளங்கும் சுக்கிரீவன்; வெம் முலை மகளிர் வெள்ளம் - விரும்பப்படும் முலைகளையுடைய வானரப் பெண்களின் கூட்டம்; மீன் எனவிளங்க - நட்சத்திரங்களைப் போல் விளங்க (அவர்களின் இடையில்); விண்ணில் சும்மை வான் மதியம் குன்றில் தோன்றியது எனவும் - தனக்குரிய ஒளியுடன் வானில் காணப்படும் வெண்மையான சந்திரன் மலையில்தோன்றியது போன்றும்; தோன்றி - காணப்பட்டு; அம்மலை உதயம் செய்த- அந்த உதயகிரியில் உதித்து ஒளிவீசும்; தாதையும் அனையன் ஆனான் - தந்தையாகிய சூரியனையும் ஒத்து விளங்கினான். சுக்கிரீவனுக்கு அவனது மகிழ்ச்சியின் சிறப்பை விளக்கச் சந்திரனும், அவனது அழகைச் சுட்ட உதயகிரியில் தோன்றி சூரியனும் உவமைகளாம். சும்மை - பேரொலி. கோள் - முதனிலை திரிந்ததொழிற்பெயர். 104 |