அனைவரும் மாளிகையை அடைதல்

4374. எழுவினும், மலையினும், எழுந்த தோள்களால்,
தழுவினர், இருவரும்; தழுவி, தையலார்
குழுவொடும், வீரர்தம் குழாத்தினோடும் புக்கு,
ஒழிவு இலாப் பொற் குழாத்து உறையுள் எய்தினார்.

     இருவரும் - (இலக்குவன் சுக்கிரீவன் என்ற) அந்த இருவரும்;
எழுவினும் மலையினும் எழுந்த தோள்களால் -
இரும்புத் தூண், மலை
என்ற இவற்றைக் காட்டிலும் பருத்து ஓங்கிய (தம்) தோள்களால்; தழுவினர் -
ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டார்கள்; தழுவி - (அவ்வாறு) தழுவிக்
கொண்டு; தையலார் குழுவொடும் - வானர மகளிரின் கூட்டத்துடனும்;
வீரர்தம் குழாத்தினோடும் -
வீரர் கூட்டத்தோடும்; ஒழிவு இலா - எடுக்க
எடுக்கக் குறையாத; பொற்குழாத்து உறையுள் - பொன்திரள் நிறைந்த
அரண்மனைக்குள்ளே; புக்கு எய்தினார் - சென்ற சேர்ந்தார்கள்.

     பொற்குழாத்து உறையுள் - நிதியறை. தோளுக்கு எழுவும் மலையும்
உவமைகளாம்.  எழு - தூண்; இங்கு இரும்புத் தூணைக் குறித்தது.     106