4376. | 'கல் அணை மனத்தினை யுடைக் கைகேசியால், எல் அணை மணி முடி துறந்த எம்பிரான் புல் அணை வைக, யான் பொன் செய் பூத் தொடர் மெல் அணை வைகவும் வேண்டுமோ?' என்றான். |
கல் அணை மனத்தினை உடை - கல்லைப் போன்ற மனத்தையுடைய; கைகேசியால் - கைகேசி பெற்ற வரத்தின் விளைவாக; எல் அணை மணி முடி - ஒளி பொருந்திய மணி மகுடத்தை; துறந்த எம் பிரான் - விட்டு (கானகம்) வந்த எம் தலைவனான இராமன்; புல் அணை வைக - புல்லாலாகிய படுக்கையிலே தங்க; யான் - நான்; பொன்செய் பூத் தொடர் - பொன்னால் செய்யப்பட்டதும் பூக்களால் புனையப் பெற்றதுமான; மெல் அணை வைகவும் - மென்மையான ஆசனத்தில் தங்குதலும்; வேண்டுமோ - விரும்பத்தக்கது ஆகுமோ? என்றான் - என்று கூறினான். இலக்குவன் கைகேயி செய்த கொடுமையை மறவாமல் இருப்பதைக் 'கைகேசியால் எல் அணை மணி முடி துறந்த எம்பிரான்' என்னும் மொழிகள் குறிக்கின்றன. 108 |