4377. | என்று அவன் உரைத்தலும், இரவி காதலன் நின்றனன்; விம்மினன், மலர்க்கண் நீர் உக; குன்று என உயர்ந்த அக் கோயில் குட்டிம வன் தலத்து இருந்தனன், மனுவின் கோ மகன். |
என்று அவன் உரைத்தலும் - என்று அந்த இலக்குவன் சொல்லிய அளவில்; இரவி காதலன் - சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; நின்றனன் - (திகைத்து) நின்றான்; மலர்க் கண் நீர் உக விம்மினன் - தாமரை மலர் போன்ற கண்களில் கண்ணீர் பெருக உள்ளம் பொருமினான் (அப்போது); மனுவின் கோமகன் - மனுவின் வழித் தோன்றிய அரசகுமாரனான இலக்குவன்; குன்று என உயர்ந்த - மலை போல ஓங்கிய; அக் கோயில் - அந்த அரண்மனையினுடைய; குட்டிம வன்தலத்து - கல் பரப்பப்பட்ட மேடையில்; இருந்தனன் - அமர்ந்தான். சுக்கிரீவன் கண்ணீர் உகுத்தது இலக்குவனுடைய சொற்களைக் கேட்டும் தான் அந்நிலையில் நில்லாதது கருதியே எனலாம். குட்டிமம் - வடசொல்: கல் பாவிய வலிய இடம் என்று பொருள்படும். 109 |