4380. | 'வருத்தமும் பழியுமே வயிறு மீக் கொள, இருத்தும்என்றால், எமக்கு இனியது யாவதோ? அருத்தி உண்டு ஆயினும், அவலம்தான் தழீஇ கருத்து வேறு உற்றபின், அமிர்தும் கைக்குமால்' |
வருத்தமும் பழியுமே - துன்பமும் பழிச் சொல்லுமே; வயிறு மீக் கொள - வயிற்றில் நிரம்பியிருக்கவும்; இருத்தும் என்றால் - (நாங்கள்) உயிர் பிழைத்திருக்கிறோம் என்றால்; எமக்க இனியது - எங்களுக்கு இனிமை தரக்கூடியது; யாவது? - எதுதான்? அருத்தி உண்டு ஆயினும் - உண்பதற்கு மிகுந்த ஆசை இருப்பினும்; அவலம் தழீஇ - துன்பமடைந்து; கருத்து வேறு உற்றபின் - மனம் மாறுபட்ட காலத்தில்; அமிழ்தும் கைக்கும் - தேவாமுதமும் கசக்குமல்லவா? உலகின் சுவையான பொருளையுண்ண ஒருவனுக்கு விருப்பமிருப்பினும் துன்பத்தால் மனம் சோர்ந்திருக்குங் காலத்துத் தேவாமுதமும் இனிமையாகத் தோன்றாது. அவ்வாறே உயிரைப் போக்கக் கூடிய வருத்தத்தையும் பழியையும் சுமந்து அரிதாக உயிர் பிழைத்திருக்கையில் எதுவும் இப்போது எங்களுக்கு இனிமையாகத் தோன்றாது. ஆதலால் நீ எனக்கு இடும் இனிய உணவு வேண்டா என்று இலக்குவன் கூறினான் என்பது. இங்கே வருத்தமும் பழியும் முறையே சீதையைப் பிரிந்ததாலும், அவளைப் பிறர் கொண்டு சென்றும் மீட்கவில்லையே என்றதனாலும் ஏற்பட்டவை. தான், ஆல் - அசைகள். ஓகாரம்எதிர்மறை. 112 |