4381. | 'மூட்டிய பழி எனும் முரங்கு தீ அவித்து, ஆட்டின கங்கை நீர் - அரசன் தேவியைக் காட்டினஎனின் - எமைக் கடலின் ஆர் அமிர்து ஊட்டினையால்; பிறிது உய்வும் இல்லையால். |
அரசன் தேவியை - 'இராமன் தேவியாகிய சீதை'; காட்டினை எனின் - இருக்குமிடத்தைக் காட்டுவாயானால்; எமை - எங்களைச் சுற்றி; மூட்டிய பழி எனும் - மூண்டுள்ள பழியாகிய; முருங்கு தீ அவித்து - அழிக்கவல்ல நெருப்பைத் தணித்து; கங்கை நீர் ஆட்டினை - கங்கையாற்றின் நீரால் நீராட்டினவனாவாய் (மேலும்); - கடலின் ஆர் அமிழ்து ஊட்டினை - பாற்கடலில் தோன்றிய அரிய அமிழ்தத்தால் எங்களை உண்பித்தவனாவாய்; பிறிது உய்வும் இல்லை - பிறகு எத்துயரமும் எங்களுக்கு இல்லாமற்போகும். 'அமுது அருந்துக' என்ற சுக்கிரீவனுக்கு இலக்குவன் தான் விரும்பும் மஞ்சனைத்தையும் அமிழ்தத்தையும் சுட்டினான் என்பது. நீராடுவதால் வெப்பம் தணிதலும், நீரால் நெருப்பு அவிதலுமாகிய இயல்புகள் இங்குக் கருதத்தக்கன. இலக்குவன் சுக்கிரீவனது கடமையையும், தான் வந்த காரணத்தையும் குறிப்பாகச் சுட்டினான் என்பது. 113 |