4383.'அன்றியும் ஒன்று உளது;
      ஐய! யான் இனிச்
சென்றெனன் கொணர்ந்து அடை
      திருத்தினால், அது
நுன் துணைக் கோ
      மகன் நுகர்வது; ஆதலான்,
இன்று, இறை தாழ்த்தலும்
      இனிது அன்றாம்' என்றான்.

     ஐய - 'தலைவனே!அன்றியும் ஒன்று உளது - (இவை)  அல்லா
மலும் (நான் கூற வேண்டியது) இன்னும் ஒன்று இருக்கின்றது; யான் இனிச்
சென்றனென் -
நான் இனித் திரும்பிச் சென்று; கொணர்ந்து - கீரை
முதலியவற்றைக் கொண்டு வந்து; அடை திருத்தினால் - அந்தக் கீரை
முதலியவற்றைப் பக்குவம் செய்தால்; அது நுன் துணைக் கோமகன்
நுகர்வது -
அதனையே உன் நண்பனும் அரசகுமாரனுமாகிய இராமன்
நுகர்வதாகும்; ஆதலான் - ஆதலால்; இன்று இறை தாழ்த்தலும் -
இப்பொழுது நான் இங்கே ஒரு கணமும் தாமதித்தல்; இனிது அன்றாம் -
இனிமை தருவது ஆகாது; என்றான் - என்று இலக்குவன் சொல்லி
முடித்தான்.

     இராமன் பட்டினியோடு இருக்கையில் நான் இங்கே நொடிப் பொழுது
தாமதிப்பதும் இனிதாகாது என்று குறிப்பித்தவாறு.  அடை - இலை, கீரை,
நுன்- திசைச் சொல்.                                            115