4384.வானர வேந்தனும்,
      'இனிதின் வைகுதல்,
மானவர் தலைமகன்
      இடரின் வைகவே,
ஆனது, குரக்குஇனத்து எமர்கட்கு
      ஆம்!' எனா,
மேல் நிலை அழிந்து,
      உயிர் விம்மினான்அரோ.

     வானர வேந்தனும் - (இவ்வாறு இலக்குவன் கூறக் கேட்டு) குரக்
கரசனான சுக்கிரீவனும் (இலக்குவனைப் பார்த்து); மானவர் தலை மகன் -
'மனு வம்சத்தில் சிறந்தவனான இராமன்; இடரின் வைக - துன்பத்தில்
ஆழ்ந்திருக்கும்போது; இனிதின் வைகுதல் ஆனது - இன்பமாகக்
காலத்தைப் போக்குவதென்பது; குரக்கு இனத்து எமர்கட்கு
ஆம் -
வானர குலத்துப் பிறந்த எங்களைப் போன்றவர்க்கே பொருந்தும்;
எனா -
என்று கூறி; மேல்நிலை அழிந்து - உடம்பு நிலை குலைந்து;
உயிர் விம்மினான் - உயிர் வருந்தினான்.

     இலக்குவன் சொற்களைக் கேட்ட சுக்கிரீவன் ஆற்றாது உடல்தளர்ந்து
உயிர் வருந்தினான் என்பது.  மானவத் தலைமகன் - சான்றோர் தலைவன்
எனினுமாம்.  மேல் என்பது புறவுடலாம்; உடல் எழில் குலைதலும் மனம்
நோதலும் ஆகும். மேல் என்னும் சொல் இன்னும் தென்தமிழகத்தில் உடல்
என்ற பொருளில் வழங்குகிறது.  தென்தமிழகத்தில் மேலுக்குக் குளிச்சிட்டு
வரேன் என்று பேசுதல்கண்கூடு.                                  116