அனுமனைச் சேனையுடன் வருமாறு ஏவிச் சுக்கிரீவன்
இராமனிடம்செல்லுதல்

4385.எழுந்தனன் பொருக்கென,
      இரவி காண்முளை;
விழுந்த கண்ணீரினன்,
      வெறுத்த வாழ்வினன்,
அழிந்த அயர் சிந்தையன்,
     அனுமற்கு, ஆண்டு, ஒன்று
மொழிந்தனன், வரன்முறை
      போதல் முன்னுவான்.

     இரவி கான்முனை - சூரிய குமாரனான சுக்கிரீவன்; பொருக்கென
எழுந்தனன் -
விரைவாக எழுந்தான்; விழுந்த கண் நீரினன் - பெருகும்
கண்ணீரையுடையவனும்; வெறுத்த வாழ்வினன் - செல்வ வாழ்க்கையை
வெறுத்தவனும்; அழிந்து அயர் சிந்தையன்- வருந்தித் தளரும்
மனமுடையவனுமாகி; வரன் முறை போதல் முன்னுவான் - இராமனிடம்
முறைப்படி செல்ல எண்ணியவனாய்; ஆண்டு - அப்பொழுது; அனுமற்கு -
அனுமனிடம்; ஒன்று மொழிந்தனன் - ஒரு சொல் சொன்னான்.

     கான் முளை - ஒரு வம்சத்தில் தோன்றியவன்.  கால் - வமிசம்.
விழுந்த கண்ணீர், வெறுத்த வாழ்வு என்று எச்சங்களையடுக்கியதால்
சுக்கிரீவன் விழிகளில் பிறரின் துயரம் கண்டு பொறாததால் தானாகப் பெருகிய
கண்ணீரும், உண்மையாகவே வாழ்வில் ஏற்பட்ட வருத்தமும் கண்டு
தெளியலாம்.                                                 117