சுக்கிரீவன் இராமனை அடைந்து தொழுதல்

4387. அங்கதன் உடன் செல,
      அரிகள் முன் செல,
மங்கையர் உள்ளமும் வழியும்
      பின் செல,
சங்கை இல் இலக்குவன் -
      தழுவி, தம்முன்னின்,
செங் கதிரோன் மகன்
      கடிது சென்றனன்.  *

     செங்கதிரோன் மகன் - சிவந்த ஒளிக்கற்றைகளையுடைய சூரியன்
மகனான சுக்கிரீவன்; சங்கை இல் - எப் பொருளிலும் ஐயம் திரிபு இல்லாத
(தூய மனமுடைய); இலக்குவன் தழுவி - இலக்குவனைத் தழுவிக் கொண்டு;
அங்கதன் உடன்செல -
அங்கதன் தன்னுடன் வர வும்; அரிகள் முன் செல
-
வானரங்கள் முன்னே செல்லவும்; மங்கையர் உள்ளமும் - (அன்புள்ள)
வானர மகளிரின் மனமும் பின் தொடர்ந்து வரவும்; வழியும் பின் செல -
கடந்தவழிகள் பின்னே தங்கி விடவும்; தம்முனின் - தமையனான
இராமனிடம்; கடிது சென்றனன் - விரைந்து சென்றான்.

     சுக்கிரீவனுடைய காதலுக்கு உரியர் ஆகலின் மகளிர் மனம் அவன் பின்
சென்றது என்றார்.  பின்செல: இரட்டுற மொழிதல் பின் தங்க பின்தொடர
என்னும் இருபொருள் தருதலால்.  தம்முன்: இராமனால் தம்பியாகக்
கருதப்பட்டவனாகலின் தம்முன் என்றார்.  அரசனுக்கு முன்பு வீரர்கள்
செல்வது மரபாதலின் 'அரிகள் முன்செல' என்றார்.                    119