4389.கொடி வனம் மிடைந்தன; குமுறு பேரியின்
இடி வனம் மிடைந்தன; பணிலம் ஏங்கின;
தடி வனம் மிடைந்தன, தயங்கு பூண் ஒளி;
பொடி வனம் எழுந்தன; வானம் போர்த்தவே.

     கொடி வனம் மிடைந்தன - கொடிகளின் தொகுதிகள் அடர்ந்து
நிறைந்தன; குமுறும் பேரியின் - முழங்குகின்ற பேரிகைக் கருவிகளின்;
இடிவனம் மிடைந்தன
- இடி போன்ற ஒலித் தொகுதிகள் நிறைந்தன;
பணிலம் ஏங்கின -
சங்குகள் ஒலித்தன; தயங்கு பூண் ஒளி - விளங்கு
கின்ற அணிகளின் ஒளியாகிய; தடி வனம் மிடைந்தன - மின்னலின்
தொகுதிகள் நிறைந்தன; பொடி வனம் எழுந்தன - (பூமியிலிருந்து) புழுதித்
தொகுதிகள் கிளம்பின; வானம் போர்த்த - இவையெல்லாம் வானத்தை
அளாவி மூடின.

     வனம் - இங்கே தொகுதி, மிகுதி என்னும் பொருளில் வந்துள்ளது.

     மிடைந்தன என்ற ஒரு சொல் பொருளில் பல முறை வந்தது.

     தடி - மின்னல்; தடித் என்ற வடசொல்லின் விகாரம் என்பர்.       121