4391. | வீரனுக்கு இளையவன் விளங்கு சேவடி பாரினில் சேறலின், பரிதி மைந்தனும், தாரினின் பொலங் கழல் தழங்க, தாரணித் தேரினில் சென்றனன், சிவிகை பின் செல. |
வீரனுக்கு இளையவன் - இராமனுக்குத் தம்பியான இலக்குவனது; விளங்கு சேவடி - ஒளிவிடுகின்ற சிவந்த திருவடிகள்; பாரினில் சேறலின் - நிலத்தில் நடந்து செல்லுவதனால்; பரிதி மைந்தனும் - சூரிய குமாரனான சுக்கிரீவனும்; தாரினில் பொலன் கழல் தழங்க - கிண்கிணி மாலைகள் போலக் காலில் கட்டிய வீரக் கழல்கள் ஒலிக்க; (தானும் காலால் நடந்து); சிவிகை பின் செல- பல்லக்கு தனக்குப் பின்னே வர; தாரணித் தேரினில்- பூமியாகிய தேரின் மேல்; சென்றனன் - சென்றான் (தரையில் நடந்தான்). இலக்குவன் பாதம் வருந்தப் பூமியில் நடந்து செல்லுதலால், சுக்கிரீவனும் சிவிகையேறிச் செல்லாமல் தரையில் நடந்து சென்றான் என்பது. தார் - கிண்கிணிமாலை. இலக்குவனும், சுக்கிரீவனும் ஒரு பொற் சிவிகையிலேறிச் சென்றதாக வான்மீகி கூறுவார். 123 |