4392. | எய்தினன், மானவன் இருந்த மால் வரை, நொய்தினின் - சேனை பின்பு ஒழிய, நோன் கழல் ஐய வில் குமரனும், தானும், அங்கதன் கை துறந்து அயல் செல, காதல் முன் செல. |
நோன் கழல் - வலிய வீரக் கழலையும்; ஐய வில் குமரனும் - அழகிய வில்லையும் உடைய இலக்குவனும்; தானும் - சுக்கிரீவனும்; சேனை பின்பு ஒழிய - (உடன் வந்த) வானர சேனைகள் பின்னே தங்கவும்; அங்கதன் கைதுறந்து - அங்கதன் பக்கத்தை விட்டு; அயல் செல - ஒரு புறம் வரவும்; காதல் முன்செல - (இராமனைக் காண வேண்டுமென்ற) ஆசை முன்னே செல்லவும்; மானவன் இருந்த - இராமன் தங்கியிருந்த; மால்வரை - பெரிய மலையை; நொய்தினின் எய்தினன் - விரைவாகச் சென்றடைந்தான். பெரியவரிடத்துச் செல்லும்போது ஆடம்பரத்துடன் செல்லுதல் தகுதியாகாது. ஆதலால் இராமனிடம் செல்லும் சுக்கிரீவன் வானரசேனைகளை விட்டு அங்கதனும் சிறிது அப்பால் வரத் தான் தனியே செல்பவனானான் என்பது. இராமன் தங்கியிருந்த இடத்தை ஆர்வமிகுதியால் சுக்கிரீவன் வேகமாகச் சென்றதனால் வானர வீரரும் அங்கதனும் பின்னிட நேரிட்டது எனவும் கூறலாம். கழலுக்கு நோன்மை - பிறக்கிடாத தன்மை. காதல் முன்செல -இராமனைக் காணு முன்னரே காணவேண்டும் என்ற ஆசை முன் செல என்றவாறு. 'நாணனும் அன்பும் முன்பு நளிர்வரை ஏற' (பெ.பு:கண்ணப்ப. 103) எனத் திண்ணனாருக்கு முன் அவர் கொண்ட அன்பு முன்னே சென்றதாகச் சேக்கிழார் குறிப்பிடுதல் இங்கே ஒப்புநோக்கத்தக்கது. 124 |