4393. கண்ணிய கணிப்ப அருஞ்
      செல்வக் காதல் விட்டு,
அண்ணலை அடி தொழ
      அணையும் அன்பினால்,
நண்ணிய கவிக் குலத்து
      அரசன், நாள்தொறும்
புண்ணியன் - தொழு
      கழல் பரதன் போன்றனன்.

     கண்ணிய -  யாவரும் கருதக் கூடிய; கணிப்ப அருஞ் செல்வம் -
அளவிடமுடியாத (மிகப் பெருஞ்) செல்வத்தில்; காதல்விட்டு - ஆசையை
நீத்து; அண்ணலை - இராமனின்; அடிதொழ அணையும் - திருவடிகளை
வணங்குவதற்குப் பொருந்திய; அன்பினால் நண்ணிய - பக்தியோடு
அடைந்த; கவிக் குலத்து அரசன் - வானர குலத்தலைவ னான சுக்கிரீவன்;
நாள்தொறும் -
தினந்தோறும்; புண்ணியன் கழல் தொழு - புண்ணிய
வடிவாகிய இராமனைத் திருவடிகளில் வீழ்ந்து வணங்குகின்ற; பரதன்
போன்றனன் -
பரதனையொத்து விளங்கினான்.

     சுக்கிரீவன் இராமனிடம் கொண்ட பக்தி பரதனது பக்தியைப் போலும்
என்பது.  பரதன் செல்வப் பற்றுச் சிறிதுமின்றி இராமனுடைய பாதுகைகளை
நாள்தோறும் வணங்கும் தன்மையன்; அரச போகத்தில் மூழ்கிக் கிடந்திடாமல்
இராமனிடம் பக்திகொண்டு அப் பெருமானின் திருவடிகளை வணங்கி வரும்
பரதனைச் சுக்கிரீவனுக்கு உவமைகூறினார்.                        125