4400.'இனையன யானுடை
      இயல்பும், எண்ணமும்,
நினைவும், என்றால், இனி,
      நின்று யான் செயும்
வினையும், நல் ஆண்மையும்,
      விளம்ப வேண்டுமோ? -
வனை கழல், வரி சிலை,
      வள்ளியோய்!' என்றான்.

     வனைகழல் - கட்டிய வீரக் கழலையும்; வரிசிலை வள்ளியோய் -
கட்டமைந்த வில்லையுமுடைய வள்ளலே!யான் உடை - என்னுடைய;
இயல்பும் எண்ணமும் -
தன்மையும் மனக்கருத்தும்; நினைவும் -
எண்ணங்களும்; இனையன என்றால் - இத் தன்மையனவாக இருந்தால்; இனி
யான் -
இனிமேல் நான்; நின்று செயும் - துணையாக இருந்து செய்யப்
போகின்ற; வினையும் நல்லாண்மையும் - செயலையும் சிறந்த வீரத்தையும்;
விளம்ப வேண்டுமோ -
சொல்லத் தகுமோ; என்றான் - (இராமனை
நோக்கிச் சுக்கிரீவன் மனம் வருந்திக்) கூறினான்.

     நீ மனத்தில் பெருந் துயரத்தோடு இருக்கவும் நானோ சீதையைத்
தேடித்தர வேண்டிய முயற்சி செய்யாமல் இன்ப நுகர்ச்சியில் இதுவரையில்
மனம் தோய்ந்திருந்தமையால், இனி அச் செயலை விரைந்து முடிப்பேனென்று
எனது செயலாண்மையைக் கூறுவதற்கும் என் நாத் துணியவில்லை என்று
சுக்கிரீவன் தன்செயலுக்கு வருந்திக் கூறுகின்றான் என்பது.

     ஓர் உதவியும் தான் செய்யாதிருந்த போதும் தனது பகையைப் போக்கி,
மனைவியைத் தன்னிடம் சேர்த்து அரசபோகத்தையும் அருளிய கருணை
நோக்கிச் சுக்கிரீவன் இராமனை 'வள்ளியோய்' என்றான்.  மதுவுண்டு
களிக்கும் குரங்கின் இயல்பும், போகத்திலேயே ஆழ்ந்து கிடக்கும் எண்ணமும்,
கைம்மாறு செய்வதற்கு விரைந்து நில்லாத நினைவும், என்பான் 'இயல்பும்
எண்ணமும் நினைவும்' என்றான்.                                 132