அனுமன் எங்கே என இராமன் வினாவ
அவன் சேனையுடன் வருவன்என்றல்

4402. ஆரியன், பின்னரும் அமைந்து, 'நன்கு உணர்
மாருதி எவ் வழி மருவினான்?' என,
சூரியன் கான்முளை, 'தோன்றுமால், அவன்
நா அரும் பரவையின் நெடிய சேனையான்.'

     ஆரியன் - இராமன்; பின்னரும் அமைந்து - மறுபடியும் சொல்லத்
தொடங்கி (சுக்கிரீவனை நோக்கி); நன்கு உணர் மாருதி - (முக் காலத்தையும்)
நன்றாக அறியவல்ல காற்றுக் கடவுளின் மகனான அனுமன்; எவ்வழி
மருவினான் என -
எங்கே இருக்கிறான் என்று கேட்க; (அதற்கு); சூரியன்
கான்முளை -
சூரியன் மகனான சுக்கிரீவன்; அவன் - அந்த அனுமன்; நீர்
அரும் பரவையின் -
நீர் நிரம்பிய அரிய கடல் போன்ற; நெடிய
சேனையான் -
பெருஞ் சேனையையுடையவனாய்; தோன்றும் - வந்து
சேருவான்.

     இராமன் அனுமனைக் குறித்தத் தனியே வினவியதால் அவனிடம்
இராமன் வைத்துள்ள பேரருள் தோன்றும்.  பரவை பரந்திருத்தலின் கடலுக்குக்
காரணக் குறியாயிற்று.                                           134