4403. | 'கோடி ஒர் ஆயிரம் குறித்த கோது இல் தூது ஓடின நெடு்ம் படை கொணர்தல் உற்றதால்; நாள் தரக் குறித்ததும், இன்று; நாளை, அவ் ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால். |
கோடி ஓர் ஆயிரம் - ஓராயிரங் கோடியாக; குறித்த கோது இல் தூது- கணக்கிடப்பட்ட குற்றமற்ற தூதர்கள்; நெடும் படை - பெரிய வானரசேனைகளை; கொணர்தல் உற்றது ஓடின - திரட்டிக் கொண்டு வரும் பொருட்டு(ச் செய்தி செல்ல) விரைந்து சென்றுள்ளார்கள்; (இது வரை வானரப் படைகள் வராததால் அவற்றைத் திரட்டி வருவதற்கு அனுமன் காத்திருக்கிறான்); தரக் குறித்தது நாளும் உற்றது - (அவ்வாறு) கொண்டு வருவதற்குக் குறித்த நாளும் வந்து விட்டது; ஆல் - ஆதலால்; இன்று நாளை - இன்று அல்லது நாளை; அவ் ஆடல் அம் தானையோடு - வலிமையுள்ள அந்த வானர சேனையுடன்; அவனும் எய்தும் - அந்த அனுமனும் இங்கே வந்துவிடுவான் (என்றான்). ஆல் - இரண்டனுள் முன்னது 'ஆதலால்' என்பதன் விகாரம்; பின்னது ஈற்றசை. அடல் - வலி:இங்கே ஆடல் என நீண்டது. 135 |