4404. | 'ஒன்பதினாயிர கோடி உற்றது நின் பெருஞ் சேனை; அந் நெடிய சேனைக்கு நன்கு உறும் அவதி நாள் நாளை; நண்ணிய பின், செயத்தக்கது பேசற்பாற்று' என்றான். |
ஒன்பதின் ஆயிரம் கோடி - (இப்பொழுது என்னுடனே) ஒன்பதினாயிரங் கோடிக் கணக்கான; நின்பெருஞ் சேனை - உனது பெரிய வானர சேனை; உற்றது - வந்துள்ளது; அந் நெடிய சேனைக்கும் - (இனி வரவேண்டிய) அந்தப் பெரிய சேனைக்கு; நன்கு உறும் அவதி நாள் நாளை - ஒன்று திரண்டு வந்து சேர்வதற்குரிர நாளும் நாளைக்கே; நண்ணிய பின் - அந்தச் சேனையும் வந்த பிறகு; செயத் தக்கது- செய்யவேண்டியதைப் பற்றி; பேசற் பாற்று - பேசுவது தகுதி யுடையது; என்றான் - என்று கூறிமுடித்தான். வானர சேனையுடன் அனுமன் வந்த பிறகே செய்யத்தக்கதைப் பற்றிப் பேசவேண்டு மென்று சுக்கிரீவன் கருதினான் என்பது. தான் இராமனுக்கு அடியவன் என்ற எண்ணத்தால் சுக்கிரீவன் தன் சேனையை 'நின் பெருஞ் சேனை' என்றான். நெடியசேனை - துணைப்படை. 136 |