4409. ஊன்றி மேருவை எடுக்குறும்
      மிடுக்கினுக்கு உரிய
தேன் தெரிந்து உண்டு
      தெளிவுறு வானரச் சேனை,
ஆன்ற பத்து நூறு
      ஆயிர கோடியோடு அமையத்
தோன்றினான், வந்து -
      சுசேடணன் எனும் பெயர்த் தோன்றல்.

     சுசேடணன் எனும் பெயர் தோன்றல் - சுசேடணன் என்னும்
பெயரையுடைய வானர வீரன்; மேருவை ஊன்றி எடுக்குறும் - மேரு
மலையையும் பேர்த்து எடுக்கவல்ல; மிடுக்கினுக்கு உரிய - வலிமையு
டையதும்; தேன் தெரிந்து உண்டு - மதுவை ஆராய்ந்து பருகி; தெளிவுறு -
மயக்கமின்றித் தெளிவு பெற்றனவுமான; ஆன்ற வானர சேனை பத்து நூறு
ஆயிர கோடியோடு -
சிறந்த பத்து இலட்சங் கோடி வானர சேனையோடு;
அமைய வந்து தோன்றினான் -
பொருந்த வந்து சேர்ந்தான்.

     மேருவையும் பேர்த்து எடுக்கக் கூடிய வல்லமையமைந்த பத்து இலட்சங்
கோடி வானர சேனையோடு சுசேடணன் வந்து சேர்ந்தான் என்பது.
சுசேடணன்: இவன் வாலியின் மனைவியான தாரைக்குத் தந்தை: வருணதேவன்
மைந்தன் என்றும் கூறுவர்.  தோன்றல்: நல்ல தோற்றமுடையவன் என்று
காரணக்குறியாம்.                                              3