4410. | ஈறு இல் வேலையை இமைப்புறும் அளவினில் கலக்கிச் சேறு காண்குறும் திறல் கெழு வானரச் சேனை ஆறு - எண் ஆயிர கோடியது உடன் வர, - அமிழ்தம் மாறு இலா மொழி உருமையைப், பயந்தவன் - வந்தான். |
அமிழ்தம் மாறு இலாமொழி - தேவ அமிழ்தமும் இணையாகாத (இனிய) சொற்களையுடைய; உருமையைப் பயந்தவன் - சுக்கிரீவன் மனைவியான உருமையைப் பெற்ற தந்தை; ஈறு இல் வேலையை - முடிவு காணப்படாத கடலையும்; இமைப்புறம் அளவினில் - கண் இமைக்கும் நேரத்தில்; கலக்கிச் சேறு காண்குறும் - கலக்கிச் சேறாக்க வல்ல; திறல் கெழு - வலிமை நிறைந்த; வானர சேனை ஆறு எண் ஆயிர கோடியது - நாற்பத்தெட்டாயிரங் கோடி வானர சேனை; உடன் வர - தன்னைத் தொடர்ந்து வர; வந்தான் - வந்து சேர்ந்தான். உருமையின் தந்தை தாரன் என்பவன்; இவன் தேவகுருவாகிய பிரகஸ்பதியின் மைந்தன். இத் தாரன் கடலையும் கலக்கிச் சேறாக்க வல்ல நாற்பத்தெட்டாயிரங் கோடி வானர சேனையோடு வந்தான் என்பது. கோடியது: (கோடி + அது) - அது பகுதிப் பொருள் விகுதி. 4 |