4411.ஐம்பது ஆய நூறாயிர
      கோடி எண் அமைந்த,
மொய்ம்பு மால் வரை புரை
      நெடு வானரம் மொய்ப்ப, -
இம்பர் ஞாலத்தும் வானத்தும்
      எழுதிய சீர்த்தி
நம்பனைத் தந்த கேசரி -
      கடல் என நடந்தான்.

     இம்பர் ஞாலத்தும் - இந்த உலகத்திலும்; வானத்தும் - விண்ணுலகத்
திலும்; எழுதிய சீர்த்தி - பொறித்த பெரும்புகழையுடைய; நம்பனைத்
தந்த -
சிறந்தவனான அனுமனைப் பெற்ற; கேசரி - கேசரி என்னும் வானர
வீரன்; ஐம்பது ஆய நூறாயிரம் கோடி எண் அமைந்த - ஐம்பது இலட்சங்
கோடி என்று கணக்கிடப் பெற்ற; மால் வரை புரை - கைலை மைையைப்
போன்ற; மொய்ம்பு நெடு வானரம் - தோள்களையுடைய பெரிய வானர
சேனை; மொய்ப்ப - தன்னை நெருங்கி வர; கடல் என நடந்தான் -
கடல் போன்ற தோற்றத்தோடு வந்தான்.

     சேனையோடு வந்த கேசரிக்கு அலையோடு கூடிய கடல்
உவமையாயிற்று.  அனுமன், தன் செயலால் மிகப் புகழ் பெற்றானாதலால்
அவனை 'இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி நம்பன்' என்றார்.
சீர்த்தி நம்பன்; புகழ் உருவாகிய அனுமன். நம்பன்: எல்லாரும் விரும்பும்
குணமுடையவன்.  நம்பன் : சிவன் என்னும் பொருளும் உண்டு; சிவபெருமான்
அம்சமாகப் பிறந்தவன் எனவும் கொள்ளலாம்.                         5