4412. | மண் கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியின, வயிரத் திண் கொள் மால் வரை மயிர்ப் புறத்தன எனத் திரண்ட கண் கொள் ஆயிர கோடியின் இரட்டியின் கணித்த எண்கின் ஈட்டம் கொண்டு, - எறுழ் வலித் தூமிரன் - இறுத்தான். |
எறுழ் வலித் தூமிரன் - மிக்க வலிமையுடைய தூமிரன் என்பவன்; மண்கொள் வாள் எயிறு - பூமியைக் குத்தியெடுத்த ஒளியமைந்த பற்களையுடைய; ஏனத்தின் வலியின - (திருமாலின் அவதாரமான) வராகம் (பன்றி) போன்ற வன்மை பெற்றனவாகி; வயிரத் திண் கொள் - உறுதியான வலிமை கொண்ட; மால் வரை - பெரிய மலையும்; மயிர்ப் புறத்தன எனத் திரண்ட - ஒரு மயிர்க் காலிலேயடங்கக் கூடுமென்று சொல்லும்படி உருண்டு பருத்த உருவம் கொண்டனவும்; கண் கொள் ஆயிர கோடியின் இரட்டியில்- இடம் மிகுதியாகக் கொண்ட இரண்டாயிரங் கோடியாக; கணித்த - கணக்கிடப்பட்டவையுமாகிய; எண்கின் ஈட்டம் கொண்டு - கரடிக்கூட்டத்தை உடன் கொண்டு; இறுத்தான் - வந்து சேர்ந்தான். தூமிரன்: சாம்பவானுக்கு உடன் பிறந்தவன்; ஒரு கரடித் தலைவன். இவனது கரடிப் படையில் ஒவ்வொரு கரடியும் திருமாலின் வராகம்போன்று வலிமையையும், ஒரு மயிர்க் காலில் பெருமலையும் அடங்கக் கூடிய பேருருவத்தையும் உடையன என்பது. 6 |