4413.முனியும்ஆம் எனின்அருக்கனை
      முரண் அற முருக்கும்,
தனிமை தாங்கிய உலகையும்
     சலம் வரின் குமைக்கும்,
இனிய மாக் குருங்கு ஈர் -
      இரண்டு ஆயிர கோடி
அனிகம் முன் வர, - ஆன் பெயர்க்
      கண்ணன் - வந்து அடைந்தான்.

     முனியும் ஆம் எனின் - (தனித்தனியே ஒவ்வொரு குரங்கும்) கோபங்
கொள்ளுமாயின்; அருக்கனை முரண் அற முருக்கும் - சூரியனையும்
வலிமை கெடும்படி அழிக்கும்; சலம் வரின் - அடங்காத பெருஞ்சினம்
வந்தால்;  தனிமை - தனித் தனியாகவே; தாங்கிய உலகையும் குமைக்கும் -
தங்களைத் தாங்கிக் கொண்டுள்ள உலகத்தையும் குத்தியழிக்கும்; இனிய -
மகிழ்ச்சியுடைய; மாக் குரங்கு ஈர் இரண்டு ஆயிர கோடி - நாலாயிரங்
கோடி கொண்ட; அனிகம் முன்வர - வானர சேனைகள் தனக்கு முன்னே
வர; ஆன் பெயர்க் கண்ணன் - கவாட்சன் என்பவன்; வந்து
அடைந்தான்-
வந்து சேர்ந்தான்.

     சினம் கொண்டால் சூரியனையும் தனித் தனியே அழிக்க வல்லனவும்,
அவ்வாறே பூமியின்மீது சினம் கொண்டாலும், அதையும் குத்தி அழிக்க
வல்லனவுமான  நாலாயிரங் கோடி வானர சேனையுடனே கவாட்சன் என்பான்
வந்தான் என்பது.  சலம்: தணியாக் கோபம். அனீகம் : வடசொல் - இங்கே
அணிகம் என வந்தது.  ஆன் பெயர்க் கண்ணன்: கவாட்சன் என்ற
வடமொழிப் பெயரின் தமிழாக்கம்.  கோ - பசு; அக்ஷி - கண்; கோ + அக்ஷி
என்பது வடமொழிச் சந்தியின்படி கவாட்சிஎன்றாயிற்று.                7